8-ந் தேதி சிறப்பு கல்வி கடன் முகாம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் 8-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் 8-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரிப்படிப்புக்கு செல்ல கல்விக்கடன் பெறுவதற்கான சிறப்பு கடன் முகாம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு கடனுதவி வழங்கும் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான்கார்டு, பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தந்தை அல்லது தாய் வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கை கடிதம் கட்டண விவரங்கள் பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் வர வேண்டும். இம்முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியானவர்களுக்கு கல்வி கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் இதனை நன்கு பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.