நரிக்குறவர்கள் முன்னேற்றத்தில் தனி கவனம்: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்


நரிக்குறவர்கள் முன்னேற்றத்தில் தனி கவனம்: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
x

நரிக்குறவர்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக சென்னை ஐகோர்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "திருவள்ளூர், பெரியகுப்பத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடில் அமைத்து வசித்து வந்த நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

இலவச மனை

நரிக்குறவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருதி, அவர்களை முன்னேற்ற மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களை எஸ்.டி.பிரிவில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், புன்னபாக்கம் கிராமத்தில், 52 நரிக்குறவர் குடும்பத்துக்கு இலவச மனையும், அதற்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அதில், 7 குடும்பத்தினர் மட்டும் வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர். இந்த இடம், ஏற்கனவே அவர்கள் வசித்த இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதனால், இந்த நிலம் வேண்டாம், ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து மிக அருகில் உள்ள வேறு ஒரு இடம்தான் வேண்டும் என்று கேட்கின்றனர்.

சிறப்பு கவனம்

இவர்கள் புன்னபாக்கம் கிராமத்தில் குடியேறினால், அவர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வசதிகள் என்று அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த நரிக்குறவர்களுக்கு கல்வி உள்ளிட்டவைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், அரசு பிளீடர் பா.முத்துகுமார் ஆஜராகி, "நரிக்குறவர் சமுதாயம் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அவர்கள் நிலை குறித்து விசாரித்து, அவர்களுக்கு நலத்திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார்" என்று கூறினார்.

கூடுதல் அறிக்கை

இதையடுத்து, புன்னபாக்கம் கிராமத்தில் குடியேறாமல் உள்ள நரிக்குறவர்கள் குறித்தும், அவர்களுக்கு செய்துக் கொடுக்கப்போகும் திட்டங்கள் குறித்தும் கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Next Story