மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி 7 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 5 மனுக்கள், 3 சக்கர சைக்கிள் வேண்டி 1 மனு, இலவச வீடு மற்றும் பட்டா வேண்டி 12 மனுக்கள், வங்கி கடன் வேண்டி 6 மனுக்கள், உதவித்தொகை வேண்டி 5 மனுக்கள், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனு, 100 நாள் வேலை முழு ஊதியம் கிடைக்க வேண்டி 2 மனுக்கள், சிறப்பு (ஏ.ஒய்.ஒய்.) குடும்ப அட்டை வேண்டி 1 மனு, உதவி உபகரணங்கள் வேண்டி 5 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் காதொலி கருவி, ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.