சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை சீசன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
தற்போது ஊட்டியில் குளுகுளு கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மலைரெயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர், மலைெரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காமல் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது.
சிறப்பு மலைரெயில்
இதை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலைரெயில் சேவையை தொடங்க தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இந்த சிறப்பு மலைரெயில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளிலும், ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
கட்டணம்
சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மலைரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலைரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு வரும்.
இந்த சிறப்பு மலைரெயிலில் முன்பதிவுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, 2-ம் வகுப்பு ரூ.1,065, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, 2-வது வகுப்பு ரூ.815 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.