படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ஆர்வமுடன் முன்வர வேண்டும்கலெக்டர் பழனி அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
தொழிற்கடன் விழா
விழுப்புரத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் சிறப்பு தொழிற் கடன் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் புதிய நிறுவனங்களை நிறுவவும், ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களுக்கு நவீனமயமாக்குதல், உயர் உற்பத்திக்கான நிதி உதவியை வழங்குகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீட்டு மானியம் 25 சதவீதம் மற்றும் வட்டி மானியமும் கூடிய கடன் உதவி திட்டம், நீட்ஸ் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர்- பிசினஸ் சாம்பியன்ஸ், பெண்கள், பழங்குடியினர்கள், பட்டியல் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கூடுதலாக 5 சதவீத மானியம் உள்ளிட்ட பல சிறப்பு சலுகைகளுடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிதி உதவி வழங்குகிறது.
இளைஞர்களுக்கு அறிவுரை
நமது விழுப்புரம் மாவட்டம் தொழில்துறையில் சற்று பின்தங்கி இருக்கிறது. ஆகவே விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். நிறைய இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். எனவே புதிய தொழில்களை தொடங்கினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு அரசு, சிறு, குறு தொழில் தொடங்க ரூ.1,900 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதைவிட கூடுதலாக கடனுதவி வழங்க தொழில் முதலீட்டுக்கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும். படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ஆர்வமுடன் முன்வர வேண்டும். அதேநேரத்தில் அவர்களுக்கு தேவையான கடனுதவியை தொழில் முதலீட்டுக்கழகம் வழங்கி அவர்கள் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடனுதவி
அதனை தொடர்ந்து ரூ.24 கோடியே 60 லட்சம் மதிப்பிலான கடனுதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் 4 தொழில்முனைவோர்களுக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் சி.பழனி வழங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக அதிகாரி சந்தானம், முதுநிலை மண்டல மேலாளர் பழனிவேல், கிளை மேலாளர் ரவி, திட்ட அலுவலர் எலிசபெத், சிறு, குறு தொழில் சங்க தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






