கத்திரி மலைக்கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்:டிராக்டரில் பயணித்த ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.
கத்திரி மலைக்கிராமத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாதில் கலந்துகொள்ள ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. டிராக்டரில் பயணித்தாா்.
அந்தியூர் அருகே உள்ள கத்திரிமலை கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. டிராக்டரில் அமர்ந்து 10 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் பயணித்து கத்திரிமலை கிராமம் சென்றார். பின்னர் அங்கு நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு முழுஉடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, பொதுமருத்துவம், காய்ச்சல், சளி, இருமல், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 19 வயது பெண்ணுக்கு இதய நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதேபோல் 13 வயது மாணவனுக்கு ஆட்டிசம் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், கண் பரிசோதகர், ஆய்வக நுட்புனர்கள் என 20-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து வருவாய்துறை சார்பில் நடந்த குறைதீர்க்கும் முகாமிலும் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதில் தாசில்தார் பெரியசாமி முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.