மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு வெண்ணந்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் பதிவு, பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இச்சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு மற்றும் தொண்டை பிரிவு மருத்துவர், கண் சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.