மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:47+05:30)

ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் ஆலங்குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்கத்தின் உதவி இயக்குனர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்க மேலாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் வட்டார பகுதிகளை சார்ந்த மாற்றுத்திறானாளிகள் ஏராளமானோர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.85,000 மதிப்பீலான ஸ்கூட்டர் மற்றும் தையல் எந்திரங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.

இந்த முகாமில் டாக்டர், இயன்முறை மருத்துவர் பாலக்கண்ணன், வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள் ஞானஜோதி, அருள் ஞானஜோதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் துறை, சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசு மகளிர் கலை-அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஆலங்குளம் யூனியன் ஆ.மருதப்பபுரத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். தென்காசி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். நாரணபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் ஜான் சுபாஷ் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார். நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜ ஜூலியட் நன்றி கூறினார்.Next Story