தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

‘நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்து உள்ளார்.
கோவை
'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்து உள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கோவை மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் அடுத்த மாதம்(ஜூன்) 15-ந் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மருத்துவ முகாம்
அதன்படி வருகிற 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நீர்நிலைகள் பாதுகாப்பு, குப்பைகளை தரம் பிரித்தல், சுகாதாரம் பேணுதல் தொடர்பாக மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிகளை(பிளாஸ்டிக் பொருட்கள்) தடை செய்து அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மீண்டும் மஞ்சப்பை
மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை அப்புறப்படுத்த சுகாதாரமான குப்பை கிடங்குகளை பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி தடை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணியை ஏற்பாடு செய்வதுடன், 'மீண்டும் மஞ்சப்பை' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






