சேலத்தில் ஆம்னி பஸ்சில் ரூ.46 லட்சம் திருட்டு: பெங்களூருவில் முகாமிட்டு தனிப்படை போலீசார் விசாரணை
சேலத்தில் ஆம்னி பஸ்சில் ரூ.46 லட்சம் திருட்டு போன வழக்கில் பெங்களூருவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.46 லட்சம் திருட்டு
திருப்பூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 28). இவர்கள் இருவரும் திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவுளி வியாபாரம் தொடர்பாக 2 பேரும் ஐதராபாத்துக்கு சென்றுவிட்டு அங்கு வசூலான ரூ.46 லட்சத்துடன் ஆம்னி பஸ்சில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே ஒரு ஓட்டலில் அந்த ஆம்னி பஸ் நின்றது. அப்போது பணம் வைத்திருந்த பையை ஜோதிமணி, விஜயகுமார் ஆகியோர் பஸ்சின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு சாப்பிடுவதற்காக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, ரூ.46 லட்சம் வைத்திருந்த மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் நோட்டமிட்டு பையை திருடி சென்றிருப்பது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
தனிப்படை விசாரணை
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, ஆம்னி பஸ்சில் ரூ.46 லட்சம் திருட்டு போனதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.