பெண் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை
அறந்தாங்கி அருகே பெண் கொலை வழக்கில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து வேறுபாடு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மன். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 45). இவர்களுக்கு அருண் பாண்டியன் (20), ஹரிணி (18) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரம்மனை பிரிந்து சுப்பம்மாள் அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தின நகரில் மகன் அருண்பாண்டியனுடன் வசித்து வந்தார். பிரம்மன், மகள் ஹரிணியுடன் தனியாக வசித்து வருகிறார்.
பெண் கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பம்மாள் வீட்டில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது வீட்டிற்கு வந்த அருண்பாண்டியன் தனது தாய் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ேபரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை அமைப்பு
இதற்கிடையே சுப்பம்மாள் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சுப்பம்மாளை யார் கொலை செய்தார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.