சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

ஆடி அமாவாசை

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்தாண்டு அனைத்து கோவில்களிலும் ஆடி திருவிழா களைகட்டுகிறது.

இந்தநிலையில், ஆடி அமாவாசையையொட்டி சேலம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாலை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.

புத்துமாரியம்மன்

கிச்சிப்பாளையம் களரம்பட்டி புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், சேலம் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணாநகர் காந்தாரி, மீனாட்சி, மாரியம்மன் கோவிலில் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி பெண்கள் கூழ், சர்க்கரை பொங்கல் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கினர்.

சிறப்பு பூஜை

ஆடி அமாவாசையையொட்டி அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் மாரியம்மன், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story