அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
அனுமன் அவதரித்த நாளான மார்கழி மாதம் மூல நட்சத்திரம், அமாவாசை தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனுமன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டையில் ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதேபோல் கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளிக்கவசம்
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. பெருமாள் கோவில்களில் ஆஞ்சநேயர் சன்னதிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெற்றிலை, துளசி மாலை சாற்றியும், வெண்ணெய், செந்தூரம் சாற்றியும், வடைமாலை அணிவித்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் வெள்ளிக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
ஆலங்குடி அருகே காட்டுப்பட்டியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து எட்டு பழங்களை கொண்டு அலங்காரமும், 1 லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு தோரணமும் கட்டப்பட்டது. பின்னர் வீர ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வன்னிமரத்தடியில் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில் வளாகத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வடைமாலை
ஆதனக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கீரனூர் தேரடி பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார்.
திருமயம் கோட்டை வாசலில் உள்ள கோட்டை ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.