மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
மருதமலை
ஆடி கிருத்திகையை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
ஆடி கிருத்திகை
கோவை மாவட்டம் மருத மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூைஜயுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தங்க மயில் வாகனம்
பின்னர் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத ராக உற்சவர் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணியர் கோவிலை வலம் வந்தார்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம்... கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மலையடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அங்கு பாதுகாப்புக்கு நின்றவர்கள் சரிசெய்தனர்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பக்தர்கள் படி வழியாகவும், கோவில் பஸ்சிலும் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
இதேபோல ஆடிகிருத்திகையையொட்டி கோவை 80 அடி சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட கோவை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.