மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூைஜ
ஆங்கில புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி தரிசனம் செய்ய 1½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
வடவள்ளி
ஆங்கில புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி தரிசனம் செய்ய 1½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
மருதமலை கோவில்
கோவை மாவட்டம் மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வைரக் கற்கள் பதித்த சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது.
நேற்று புத்தாண்டு மற்றும் ஞாயிறுக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு முதல் மருதமலை அடிவாரம் வரை 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக சென்றன. போக்குவரத்து நெருக்கடி காரணமாக நடந்து சென்ற பக்தர்களும் வழியில்லாமல் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல 2 சக்கர, 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மலை அடிவாரத்தில் இருந்து மலையின் மேல் உள்ள கோவில்களுக்கு மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பஸ்களின் ஏற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.
1½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
மருதமலை கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்ததால் மலை அடிவாரத்திலும், மலைக் கோவிலிலும் மருதமலை செல்லும் சாலை எங்கும் பக்தர் வெள்ளமாகவே காட்சியளித்தது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து அடிவாரம் வரை செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு அதிகமாக ஆனது. கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பக்தர்கள் அவதியடைந்தனர்.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். புத்தாண்டு தினமான நேற்று சுமார் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் அவதி
மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறியதாவது:- புத்தாண்டையொட்டி மருதமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
இதையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் மருதமலை அடிவாரம், கோவில் பகுதியில் போதிய முன்னெற்பாடுகளை செய்யவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
மலை கோவிலுக்கு பக்தர்களின் வாகனங்களை அனுமதிக்காதபோது, கூடுதல் மினி பஸ்களை ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குப்படுத்தவும் போதுமான போலீசார்கள் நியமிக்கப்படவில்லை.
மேலும் கோவிலுக்கு வாகனங்களில் வந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் பார்க்கிங் இடவசதி இல்லாததால் அவதியடைந்தனர்.