பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி சனி உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி மதனகோபாலசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கும், கம்பத்து ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாட்டை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார்.
மகா ஆரத்தியின் போது பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று முழக்கமிட்டவாறு வழிபாடு நடத்தினர். புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி மதனகோபாலசுவாமி மூலவருக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவ ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருமஞ்சனம்
இதேபோல் பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவ திருமேனிகளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கோகுல் பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் வாலிகண்டபுரம், பெரம்பலூர், பிரம்மதேசம், எளம்பலூர், மேட்டுப்பாளையம், செங்குணம் உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாள்-தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியாரை தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
வெங்கடாஜலபதி அலங்காரம்
கீழப்புலியூர் ஊராட்சியில் உள்ள புலியூர் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி உற்சவத்தையொட்டி மூலவருக்கும், உற்சவ திருமேனிகளுக்கும் திருமஞ்சனமும், மூலவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரமும் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. இதில் கோவில் காரியதரிசிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.