பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கூடலூர்,
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை
கடந்த மாதம் 18-ந் தேதி புரட்டாசி தொடங்கியது. இதைத்தொடர்ந்து பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கூடலூர் புத்தூர் வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் காலை 11 மணிக்கு வெள்ளி கவசம் அணிவித்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு பூஜை
ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அர்ச்சகர்கள் சசிகாந்த், வினய் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதன் பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து மெயின் பஜார், கேசினோ சந்திப்பு, அக்ரஹாரம் சாலை வழியாக பெருமாள் வீதி உலா வந்தார். செண்டை மேளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவிலில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதேபோல் வீடுகளிலும் பெண்கள் கோலமிட்டு பூஜை அறைகளில் பெருமாளை மனமுருக வேண்டிக்கொண்டனர்.