பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் மார்கழி மாதம் பிறந்ததையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வீதிகளில் வலம் வந்து பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர்.

மார்கழி மாதம்

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்யவிரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதம்தான். போர்க்களத்தில் பாண்டவர்களில் சிலர் இறந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பாண்டவர்களின் வீட்டை அடையாளம் காண்பதற்காக வேண்டி வியாசர் வீட்டு வாசல்களில் சாணம் இட்டு மெழுகி, ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததாக ஐதீகம் கூறுகிறது.

அந்த அடையாளத்தை கொண்டு போர்க்காலத்தில் பாண்டவர்களின் வீடுகளை கவுரவர்கள் தாக்காமல் தடுக்க, கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றியதாகவும் சொல்லப்படுவதுண்டு. அன்று முதல் மார்கழி மாதத்தை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டனர். ஆண்களும், பெண்களும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பஜனை பாடல்களை பாடி மகிழ்வர்

பஜனை பாடல் பாடி வீதி உலா

இந்த நிலையில், நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி கோவை மாநகரில் பலர் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி விட்டு பகவானை தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். அதிகாலையில் எழுந்து வீதிகளில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீடுகளின் முன்பு கோலமிட்டனர்.

கோவை ராம்நகர், பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், பீளமேடு, உக்கடம் பெருமாள் கோவில் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காணமுடிந்தது.

பக்தர்கள் சாமி தரிசனம்

குறிப்பாக மார்கழி பிறப்பையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பார்த்தசாரதி ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் அதிகாலை 4.15 மணிக்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை சேவித்தல், 4.45 மணிக்கு சாற்றுமறை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

கொடிசியாவில் உள்ள கோவை திருப்பதி கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சுவாமிக்கு காலை 5.30 மணிக்கு புதிய வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.



Next Story