புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

வேலூர்


வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படும். மேலும் சனிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இங்கு அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

இதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் மாலை 4.30 மணிக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரி செல்வ கணபதி கோவிலில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள சீனிவாச கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், காங்கேயநல்லூர், ரங்காபுரம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், மற்ற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மேல்காவனூர்பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 11 மணிக்கு தங்கக்கவச சேவை, பகல் 2 மணிக்கு உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருவேங்கடம் உடையான் வைரமுடி சேவை, கருடசேவை, புஷ்ப பல்லக்கு வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

லத்தேரி ராதா ருக்மணி சமேத வேணுகோபால் கிருஷ்ணர் கோவிலில் மாலை 5 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 6 மணிக்கு சர்வ தரிசனம், பஜனை பாடல், அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காட்பாடி

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் சஞ்சீவராயர் மலையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி அணிகலன்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் வேலூர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் கருட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழாகுழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீதேவி, பூதேவி, ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் ்கோவிலில் 27-ம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாள் சந்தனக்காப்பில் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story