புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாளுக்கு சீனிவாச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சாமிக்கு சீனிவாச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
வளவனூர்
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அக்ரஹாரத்தில் உள்ள அமிர்தவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவர், உற்சவ பெருமாளுக்கும், பின்னர் வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு புஷ்ப துளசி அலங்காரம் செய்யப்பட்டும், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கோலியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் பெருமாளுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அரசமங்கலம் வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் செய்திருந்தார்.
செஞ்சி
செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதேபோல் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.