உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருப்பாவை நிகழ்ச்சி. 7.30 மணிக்கு உற்சவர் புறப்பாடு, கண்ணாடி அறையில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சியும், 8 மணிக்கு திருமஞ்சனமும், 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

ஊஞ்சல் உற்சவம்

மாலை 6 மணிக்கு புஷ்பவல்லி தாயார் ஊஞ்சல் உற்சவமும், சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு திருவாதனமும், நாலாயிர திவ்ய பிரபந்தம் வேத பாராயணம் சேவை சாற்று முறை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் மடாதிபதி ஜீயர் உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமி தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று உலகளந்த பெருமாளை தரிசனம் செய்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழங்க பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள, குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், காட்டுவன்னஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட சங்கராபுரம் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story