வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
அமாவாசையையொட்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்
அமாவாசையையொட்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வனபத்ரகாளியம்மன் கோவில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாத அமாவாசைையயொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு 16 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுக்கு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தீபம் ஏற்றி வழிபாடு
ஆற்றில் கரையோரப் பகுதியிலுள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பீமன் பகாசுரன் சன்னதி, ஆகிய சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பெண்கள் கொடி மரத்தின் முன்பு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் நினைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்
பங்களா மேடு ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.