அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
கூடலூர்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி வெள்ளி
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் திருவிழாக்கள், முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை ஆகும். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
கூடலூர் 2-வது மைல் முத்து மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஏராளமான பெண்கள் கஞ்சி கலயங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதேபோன்று மேல் கூடலூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு கூழ்
ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பிங்கர்போஸ்ட் மசினி அம்மன் கோவில், முள்ளிக்கொரை சிக்கம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.