அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூடலூர்
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளிக்கிழமை
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி கலய ஊர்வலம் மற்றும் கூழ் வார்த்து ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 3-வது ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சி கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்.
சிறப்பு பூஜை
இதேபோல் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் பட்டத்துளசியம்மன், 2-ம் மைல் முத்து மாரியம்மன், மங்குழி பகவதி அம்மன் உள்பட கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
ஊஞ்சல் வழிபாடு
கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜையும், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. இதேபோல் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.