அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர்,
ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜை
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. நேற்று ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை யொட்டி காலை முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பூஜை நடந்தது.
மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. கூடலூர் சக்தி விநாயகருக்கு ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கூடலூர் 2-ம் மைல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் வழிபட்டனர்
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர். இக்கோவிலில் இன்று(சனிக்கிழமை) ஆடி கிருத்திகை பூஜை, 28-ந் தேதி ஆடி அமாவாசை பூஜை, ஆகஸ்டு 3-ந் தேதி ஆடிபெருக்கு, 5-ந் தேதி வரலட்சுமி விரதம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜையும் நடைபெறுகிறது.
மேலும் ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.