அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி வெள்ளி

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் 45 நீள கண்ணாடி வளையல் பந்தல் அமைக்கப்பட்டு, 1 லட்சத்து 10 ஆயிரத்து 8 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து 1 லட்சத்து 8 பூக்களை கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை நடைபெற்றது. 1 லட்சத்து 8 விளக்குகள் ஏற்றி அம்மனை பக்தர்கள் வழிப்பட்டனர். பின்னர் 1 லட்சத்து 8 முறை பெண்கள் காய்த்ரி மந்திரம் கூறினார்கள். மேலும் மகா தீபாராதனை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வளையல் அலங்காரத்தில் அம்மன் ஒரு வாரத்திற்கு காட்சியளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூபாய் நோட்டு அலங்காரம்

பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூரில் ராஜராஜேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் அம்மன் மணப்பெண் மற்றும் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோன்று மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சுயம்புவாக எழுந்தருளிய அம்மனுக்கு பன்னீர், சந்தனம், பால், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

அன்னதானம்

இதேபோன்று கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரிய காளியம்மன் கோவிலிலும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கிணத்துகடவு சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் சிவலோக நாயகி, சிங்கராம்பாளையம் மகாலட்சுமியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் அன்னதானமும் நடைபெற்றது.

நெகமம் மாகாளியம்மன் கோவில், காளியப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில், சின்ன நெகமம் மாரியம்மன் கோவில், செட்டியக்காபாளையம் மாகாளியம்மன், மாரியம்மன், நாகம்மன் கோவில், காட்டம்பட்டி மாரியம்மன் கோவில், தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story