அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:45 PM GMT)

மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மாத பவுணர்மிக்கு அடுத்த நாளான பிரதமை திதி தொடங்கி, அமாவாசை வரையிலான காலத்தை மகாளய பட்சம் என்கின்றனர். இது முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த காலமாகும். இந்தநிலையில் நேற்று மகாளய அமாவாசையொட்டி பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் கரியகாளியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் அம்பராபாளையம் ஆழியாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். பொள்ளாச்சி, உடுமலை, சுல்தான்பேட்டை, நெகமம், கோட்டூர், ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆழியாற்றிற்கு வந்து திதி கொடுத்தனர்.

சிறப்பு பூஜை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 5.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால், கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மகாளய அமாவாசையையொட்டி மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கோவிலில் முன்னேற்பாடுகளை உதவி ஆணையர் விஜயலட்சுமி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். மாசாணியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் கோட்டூர், சுல்தான்பேட்டை, நெகமம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story