ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆடி வெள்ளிக்கிழமை

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். அதிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் விசேஷ நாட்களாகும். அன்றைய தினம் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவார்கள். இந்த நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் திரிசூலம் முன்பு அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

ஏக தின லட்சார்ச்சனை

திருவேங்கைவாசல் வியாக்புரிஸ்வரர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் பிரகதாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தநாத சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள முருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

பாம்பணி அம்மன் கோவில்

ஆவுடையார்கோவில் அருகே விளானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாம்பணி அம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவிலுக்கு சென்றுவந்தால் வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் வராது என்றும், விவசாய பயிர்களை பூச்சிகள் தாக்காது என்றும், கோழிகளை பாம்பணி அம்மன் கோவிலில் விட்டால் அதற்கு சீக்கு வராது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை விளானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோழிகளை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்.


Next Story