விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.

விழுப்புரம்

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நாடு முழுவதும் அனைத்து விநாயகர் கோவில்களிலும் புதுவர்ணம் பூசப்பட்டும், வாழை தோரணங்கள் கட்டப்பட்டும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவில்களில் சிறப்பு பூஜை

அந்த வகையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் 10 மணிக்கு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராபதி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில், ் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ராஜகணபதி கோவில், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வலம்புரி கோட்டை விநாயகர், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி பிள்ளையார், ரெயிலடி விநாயகர், கோவிந்தசாமி நகர் அமிர்தகணபதி, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள விநாயகர், தோகைப்பாடி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே காணையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 12 அடி உயரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான நவதானியங்களால் விநாயகர் சிலை அமைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிலைகள் வைத்து வழிபாடு

மேலும் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500 இடங்களில் பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பழ வகைகள், சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பொரி ஆகியவற்றை படையலிட்டும் விநாயகரை குடும்பத்துடன் வழிபட்டனர்.


Next Story