விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 19 Sept 2023 3:15 AM IST (Updated: 19 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவை


விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விநாயகர் சதுர்த்தி


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து வழிபாடு செய்தனர்.


மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் காலையிலேயே நடை திறக்கப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப் பட்டன. தொடர்ந்து விநாயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


முந்தி விநாயகர் கோவில்


கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் 19 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையில் 2 டன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அங்கு பக்தர்கள் வரிசையாக செல்ல வசதிகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டுவிட்டு சென்றனர். கோவை சுகாதார இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


ராஜ அலங்காரம்


ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் தங்க கவசம் அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 108 விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


வெற்றி விநாயகர்


இதுதவிர கோவை கணபதி மாநகரில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் வெற்றி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக காலையிலேயே நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன.


இந்த கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்து விட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பானுமதி நீலமேகம், வி.முருகன், அரங்கநாதன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.


பலத்த பாதுகாப்பு


இதுதவிர மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு தயிர், பால், சந்தனம், விபூதி, தேன், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


பின்னர் விநாயகர் பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்த கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


கணபதி


கோவை கணபதிபுதூர் சத்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றன. மதியம் 11.30 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிரசன்ன விநாயகர் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


இதேபோல காந்திமாநகரில் உள்ள கமல விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிப்பட்டு சென்றனர்.


மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையம் பஸ் நிலைய சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சந்தன காப்புடன் வெள்ளிக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையை கோவில் அர்ச்சகர் ஜோதிவேலவன், சங்கரேஸ்வரன் ஆகியோர் செய்தனர். வலம்புரி விநாயகர் கோவிலில் காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மேலும் 7 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இதேபோல ஹவுசிங் யூனிட் ராஜ கணபதி கோவில், கூட்டுறவு காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவில், ஸ்ரீ கிரிஜாம்பிகா சமேத கவீஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, அவல் வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.



Next Story