விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பல்வேறு இடங்களில் விதவிதமான சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது.

திருப்பத்தூர்

விநாயகர் சதுர்த்தி விழா

இந்து மதத்தில் முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள ஞானசித்தி விநாயகர் கோவில், கடைத்தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், மாய பிள்ளையார் கோவில், சங்கு சித்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி, சக்கரை பொங்கல் உள்ளிட்ட பலகாரங்களை வைத்து வழிப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விதவிதமான சிலைகள்

மேலும் பல்வேறு வீடுகளிலும், சி.கே.சி. நகர், புதுப்பேட்டை ரோடு, சாய்பாபா நகர், அண்ணா நகர், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொட்டகை அமைத்து வாழை மரக்கன்றுகள், தோரணங்கள் கட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


Next Story