விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

வேலூர்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். அதுதவிர மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்திவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் முக்கியமான பகுதிகளில் வைத்து வழிபடுவதற்காக வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் போல நேற்று காலையும் விநாயகர் சிலைகள் விற்பனையும், பூஜைப்பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.

இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் நிறுவனங்களில் பூஜைகள் செய்தனர்.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ விநாயகர், வலம்புரி விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. வெள்ளி கவசத்துடன் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, வேலூரை அடுத்த சேண்பாக்கம் வரசித்தி செல்வ விநாயகர் கோவில், அண்ணாநகரில் உள்ள பஞ்சநாக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே வ.உ.சி.நகரில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் அருகே 10 அடி உயர சிலைக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது தவிர மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்கள், இதர கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது.

700 சிலைகள்

இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலை வைக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சிலை வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் 3 அடிமுதல் 12 அடி உயரம் வரை இருந்தது.

அந்த சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் இளைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

வேலூர்-காட்பாடி சாலை தோட்டப்பாளையத்தில் புலியை விநாயகர் அடக்குவது போன்ற சிலை, அருகதம்பூண்டியில் கதிர்அரிவாள், காளை மாடுகளுடன் கூடிய விநாயகர் சிலை, புதுக்குடியான் சத்திரம் சப்போட்டாமரத்தெருவில் அயோத்திராமர் கோவில் அலங்காரத்தில் சிலை, முத்து மாரியம்மன் கோவில் தெருவில் மேளதாளம் இசைக்கும் எலியுடன் கூடிய சிலை, சத்துவாச்சாரியில் சிங்கத்தின் மேல் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்ட சிலை, வேலூர் ஓல்டுடவுனில் மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ள சிலை வைக்கப்பட்டிருந்தது.

விதவிதமான...

மேலும், வேலூர் வாணியர்பேட்டை கசாயகாரத்தெருவில் 5 தலை நாகத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகர் சிலை, வேலூர் தோட்டபாளையத்தில் சிவன் பார்வதியுடன் அமைந்துள்ள விநாயகர் சிலை, சைதாப்பேட்டை பழனி வீரபத்திரன் தெருவில் நாகபாம்பு படம் எடுத்த நிலையில் சூலம், உடுக்கையுடன் கூடிய விநாயகர் சிலை என விதவிதமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. சிலைகளை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு வீட்டில் நவதானியங்களுடன் கூடிய மஞ்சள் அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

நாளை கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலைகளில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூரில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. அதேபோல் வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகளும் நாளை கரைக்கப்படுகின்றன.


Next Story