முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 10:03 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

ஆடி மாத கிருத்திகை

ஆடி மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள கருமலை தண்டாயுதபாணி கோவிலில் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காளிப்பட்டி கந்தசாமி

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோவிலில் முருகனுக்கு ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி என பலவிதமான மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து சுவாமிக்கு பலவிதமான வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், ராஜகவச ஆடை அணிவித்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாபூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி-தெய்வானையுடன் முருகன் பல்லாக்கில் திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது.

சுப்பிரமணியர்

பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஆடி கிருத்திகையையொட்டி கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர்,

ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முருகன் திருவீதி உலா

இதேபோல் ஆடி கிருத்திகையையொட்டி சேந்தமங்கலம் மஞ்சப்புடையார் தெருவில் அமைந்துள்ள முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூரில் உள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் ஆடி கிருத்திகையையொட்டி பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து விஜயகிரி வடபழனியாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story