முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகை
ஆடி கிருத்திகை என்பது தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு உகந்த தினங்களில் ஒன்றாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
சிவசுப்பிரமணிய சுவாமி
திருச்சி-தஞ்சாவூர் சாலை அருகே வரகனேரியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றில் திருமஞ்சன படித்துறையில் இருந்து 108 பால் குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோல் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
இதுபோல் கோட்டை தையல்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, காஜாநகரில் உள்ள ஓம் ஸ்ரீசக்தி வேல்முருகன் கோவில், ஆண்டார் தெருவில் உள்ள முருகன் கோவில், சுந்தர்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், உறையூர் பாளையம்பஜார் சாலை மற்றும் மேலப்புதூரில் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மேலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதுதவிர பிரசித்தி பெற்ற பஞ்சவர்ணசுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், நாகநாதசுவாமி கோவில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ள முருகன் சன்னதியில் மூலவருக்கு ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
முசிறி-தா.பேட்டை
முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.
தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலை சுற்றி பால்குடம் எடுத்து வந்தனர். இதேபோல் என்.கருப்பம்பட்டி கிராமத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் திருவெறும்பூர், மணப்பாறை, துறையூர், துவரங்குறிச்சி, லால்குடி, கல்லக்குடி உள்ளிட்ட பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருச்சி அருகே உள்ள குமார வயலூர் முருகன் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இரவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருள, வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.