சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி,
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரதோஷ விழா
பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள யோக நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தது. நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சக்தி உடனமர் மலையாண்டிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுந்தரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் பொள்ளாச்சி சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவிலில் உள்ள சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கரப்பாடி அமணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
அபிஷேகம்
ஆனைமலை ஆழியாறு ஆற்றங்கரையில் பழமையான சோமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. திருமஞ்சனம், நெல்லிபொடி, வில்வப்பொடி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சோமேஸ்வரருக்கு துளசி, சம்பங்கி பூ மாலை அணிவித்து வெற்றிலை வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.