பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடலூர்

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை தேவநாதசாமி செங்கமலத் தாயார் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர் தேவநாதசாமி, செங்கமலத்தாயார் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம்மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலையில் பெருமாள் மற்றும் தாயாருக்கு திருபாவாடை தணிகை நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு பூப்பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு மேட்டு தெருவில் வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை வெள்ளாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி காளியம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதே பகுதியில் உள்ள வானாங்குளத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் முருகன் எழுந்தருளி ஊர்வலமாக வந்தார். அப்போது சக்தி கரகத்துடன் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னலூர்

புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சாமிக்கு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடா்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story