ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி, ஜூலை.23-
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம்
ஆடிப்பூரம் அன்று கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனென்றால் இந்த நாளில் தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். பக்தர்கள் கொடுக்கும் வளையல்கள் பூஜையில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நுழைவு வாயில் பகுதியில் தேங்காய், பழம் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். ஜோதி நகர் விசாலாட்சிமியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகள்
மகாலிங்கபுரம் விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோன்று பத்ரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், விண்ணளந்த காமாட்சியம்மன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆதிபராசகத்தியின் அவதாரமான பிருத்தியங்கரா தேவிக்கு குடும்பத்தில் உள்ள துயர்கள் நீங்கி நோய்நொடி இல்லாமல் நலத்துடன் வாழ வேண்டி பக்தர்கள் வரமிளகாய்களை கொண்டு நடத்தப்படக்கூடிய நிகும்பலா யாக பூஜையானது நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள துயர்கள் நீங்க வேண்டி வரமிளகாய்களை கொண்டு வந்து யாக குண்டத்தில் போட்டு வழிபாடு நடத்தினர். இதில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிருத்தியங்கரா தேவிக்கு சந்தனம், தினை, மஞ்சள், பால் ஆகிவற்றால் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ஆடிப்பூரவிழாவை முன்னிட்டு சிவலோகநாயகிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சிவலோகநாயகி வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.