குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி நேற்று முன்தினம் கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானுக்கும், சிவன் கோவில்களில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் குரு பெயா்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரேஸ்வரர் கோவில்

கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 11.27 மணியளவில் குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடையும்போது மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன், காமாட்சி அம்மன், காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.

தியாகதுருகம்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நவக்கிரகங்களுக்கு 51 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து குரு பகவான் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நவகிரக சன்னதியில் உள்ள குருவிற்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோல் சங்காபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர் மற்றும் சங்கராபுரம் பகுதி கோவில்களில் நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story