வைகாசி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை-நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
வைகாசி மாத அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வைகாசி மாத அமாவாசை
மேட்டூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, முனியப்பனை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு, வைகாசி மாத அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் சென்றனர். இதையொட்டி மேட்டூரில் இருந்து தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. அவற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேச்சேரி பத்ரகாளியம்மன்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்தநிலையில் கோடை வெயில் காரணமாக நேற்று அம்மனுக்கு 'நவக்கனி நாயகி பத்ரகாளி' அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திர மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம், தர்மபுரி மாவட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு வந்திருந்து, சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில்
இளம்பிள்ளை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளங்களில் புனித நீராடினர். மேலும் வியாதிகள் நீங்க வேண்டி அங்குள்ள காந்த தீர்த்த குளத்தில் உப்பு, வெல்லம், மிளகு ஆகியவற்றை போட்டி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சித்தேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இதேபோல் அருகில் உள்ள காளியம்மன், பாலமுருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் நேற்று திரளான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அமாவாசையையொட்டி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி, அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.