பெருமாள் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பஜனை குழுவினர் பாடல்களை பாடிய படி சென்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பஜனை குழுவினர் பாடல்களை பாடிய படி சென்றனர்.

பஜனை பாடல்கள்

மாதங்களில் நான் மார்கழி என பெருமாள் கூறுகிறார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து, நீராடி, சிலர் குழுக்களாக சேர்ந்து பஜனை பாடியபடி வீதிகளில் வருவார்கள்.

அதன்படி, மார்கழி மாதத்தில் பிறப்பையொட்டி பொள்ளாச்சி ஜோதிநகரில் பஜனை குழுவினர் அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பாடல்களை பாடியபடி வீதி வீதியாக சென்றனர்.

உலக நல வேள்வி குழு சார்பில் கோட்டூர் அருகே தென்சங்கம் பாளையத்தில் பெண்கள், குழந்தைகள் பஜனை பாடல்களை பாடியபடி வீதி, வீதியாக சென்றனர்.

சிறப்பு பூஜை

மார்கழி மாத பிறப்பையொட்டி பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டி.கோட்டாம்பட்டி கோதண்ட ராமர் கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைநடைபெற்றது. பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் மார்கழி மாத திருப்பாவை நிகழ்ச்சி காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. இங்கு திருப்பாவை உற்சவம் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெகமம்

நெகமம் காட்டம்பட்டிபுதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவில், செட்டியக்காபாளையம் பெருமாள் கோவில், வடசித்தூர், நெகமம் பகுதிகளில் உள்ள பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நேற்று தொடங்கியது. கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். இதையடுத்து ஆராதனை பூஜை, அபிேஷகம், அன்னதானம் நடைபெற்றது

கிணத்துக்கடவு

மார்கழி மாத பிறப்பையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4.30மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு முதற்கால பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை, இரவு 7.30 மணிக்கு 3-ம் காலபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கிணத்துக்கடவு பொன்மலைவேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் கோவில் மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story