புனித வெள்ளிளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
புனித வெள்ளிளையொட்டி நேற்று தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து, புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டார். அப்போது அவர், 'தந்தையே, தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும். எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறி உயிர் நீத்தார். இதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என சிலுவை பாதையும், தூம்பா பவனியும் தேவாலயங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் 'பலியானேன் உனக்காக' என்னும் தலைப்பில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெற்றது. இதனை திண்டுக்கல் மறைவட்ட அதிபர் மரிய இஞ்ஞாசி, ஆயரின் செயலர் இளங்கோ, பங்கு தந்தையர்கள் ஜாஸ்பர், ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர்.
இந்த திருப்பாடுகளின் வழிபாடு சிலுவைப்பாதையுடன் தொடங்கியது. இதில் இயேசு தீர்ப்பிடப்படுதல், சிலுவையை சுமத்தல், சிலுவையில் அறையப்படுதல், அவரின் இறப்பு, கல்லறையில் அடக்கம் செய்தல் என 14 நிலைகளாக நினைவு கூறப்பட்டன. அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து மற்றும் தூம்பா பவனி நடைபெற்றது. இந்த பவனி பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்துவின் பாடுகளை வாசித்து கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர். பங்குத்தந்தை இன்னாசிமுத்து மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் தலைமையில் இயேசுவின் சிலுவைப்பாட்டு வசனங்களை கூறி திருப்பலியை நடத்தினர்.