ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

ரம்ஜான் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

ரம்ஜான் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் சிறப்பு தொழுகை

உலகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்களின் புனித நாளாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.. சிவகங்கை வாலாஜா பள்ளிவாசலில் இருந்து முகமது மந்தூர்குசேன் தலைமையில் ஊர்வலாக புறப்பட்ட முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்திற்கு சென்றனர். அங்கு தலைமை இமாம் முகமதுஆபிஜின் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மீண்டும் சிவகங்கை வாலாஜா பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்து அங்கு இமாம் முகமதுசுல்தான் தூஆ ஓதினார். காரைக்குடி சின்னையா அம்பலம் பள்ளி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

இதேபோல் காரைக்குடி வ.உ.சி சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். சிறப்பு தொழுகையை முன்னிட்டு காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரியாணி விருந்து

இதேபோல் இளையான்குடி மேலப்பள்ளிவாசல், ஐ.என்.பி.டி. தொழுகை மேடை பள்ளிவாசல், சாலையூர் ஹனபி பள்ளிவாசல், ஷாபி பள்ளி வாசல், புதூர் பெரிய மற்றும் சின்ன பள்ளிவாசல், கீழாயூர் பள்ளி வாசல் மற்றும் காலனி பள்ளிவாசல், மல்லிப்பட்டினம் பள்ளிவாசல், தோதுகுடி பள்ளிவாசல், உமர்புலவர் பள்ளிவாசல், ம.ஜ.க கட்சி சார்பில் திடல் தொழுகையில் அந்தந்த இமாம் அஷ்ரப் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்பத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், மஸ்ஜிதுன் நூர்ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்பாஸ், சமஸ்கான் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷேக்தாவுத், புதுப்பட்டி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் முத்தலிபு, தென்மாப்பட்டு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முத்துமுகமது, அச்சுக்கட்டு பள்ளி தலைவர் அப்துல்கபூர், கான்பா நகர் பள்ளி தலைவர் அப்துல்லா, மின்நகர் பள்ளி தலைவர் சிக்கந்தர் பாதுஷா, புதுத்தெரு பள்ளி வாசல் தலைவர் சக்கரை முகமது மற்றும் நகர உலமாக்கள் உள்ளிட்டோர் பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடி மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலீம் தலைமையில், பெரியகடைவீதி, மூலக்கடை, திண்டுக்கல் ரோடு வழியாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு தொழுகையை முன்னிட்டு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி விருந்து நடைபெற்றது.


Next Story