பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினர்.
திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
வாழ்த்துகள்
தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
குழந்தைகளும் பலர் தொழுகை செய்து, ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொண்டனர். இதேபோன்று அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
பின்னர் அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சி (குர்பானி) வழங்கினர்.
அனைத்து தரப்பு மக்களும் தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
வந்தவாசி
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு- ஆரணி சாலையில் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வந்தவாசி அக்பர் தெருவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.