ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
x

ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும்.

நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

சிறப்பு தொழுகை

ரம்ஜான் நோன்பு என்பது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று. ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் 5 வேளை தொழுகை செய்தனர். இந்த ரம்ஜான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு முடிந்து திருவாரூரில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளிவாசல்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நேற்று அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட் தெரு ஏ.ஒய்.ஏ. திடல், மேட்டுப்பாளையம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்டத்தில் புலிவலம், கொடிக்கால் பாளையம், பொதக்குடி, அத்திக்கடை, குடவாசல், வாழ்க்கை, கொல்லாபுரம், தண்ணீர் குண்ணம், மரக்கடை, வடபாதிமங்கலம், பூதமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இனிப்புகள் வழங்கி வாழ்த்து

தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

நாச்சிகுளம் ஜும்மா பள்ளிவாசல்

அதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி முத்துப்பேட்டை தாலுகா நாச்சிகுளம் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாச்சிகுளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Related Tags :
Next Story