கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:47 PM GMT)

கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொளியில் ஜொலித்தன. மேலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கோவை பெரியகடை வீதியில் உள்ள மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் தாமஷ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் பிஷப் தாமஸ் அக்குவினாஸ் குழந்தை இயேசுவின் சொரூபத்தை அனைவருக்கும் தூக்கி காட்டி இயேசு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

கிறிஸ்து நாதர் ஆலயம்

கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று பாதிரியார் ராஜேந்திர குமார் தலைமையிலும், சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தலைமையிலும், காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாதிரியார் டேவிட் பர்ணபாஸ் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம், போத்தனூர் கார்மெல் அன்னை ஆலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல் சோல்ஸ் ஆலயம், சவுரிபாளையம் இமானுவேல் ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ராமநாதபுரம் புனித டிரினிட்டி ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள், நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

பரிசு பொருட்கள்

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்ததுடன், கேக் வெட்டி கொண்டாடினர். சிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.


Next Story