கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஊட்டி வண்டிச்சோலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், பங்கு தந்தை ஸ்டனீஸ், உதவி பங்கு தந்தை அபிஷேக் ரிசாரியோ ஆகியோர் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் பங்கு தந்தை செல்வநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குழந்தை இயேசு சொரூபத்தை பவனியாக எடுத்து வரப்பட்டது. உதவி பங்கு தந்தை ஜோசப் மறையுரை வழங்கினார். உருமாறிய கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.
சிறப்பு பிரார்த்தனை
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புனித ஸ்டீபன் ஆலயத்தில் பங்கு தந்தை அருண் திலகம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் நஞ்சநாடு கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றி, அங்குள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். ஊட்டியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் அதிகாலை 5 மணி, காலை 8 மணிக்கும், புனித தாமஸ் ஆலயத்தில் காலை 10 மணி, தோடா காலனியில் உள்ள சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
ஆலயங்கள் அலங்கரிப்பு
இதேபோல் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள ஐ.சி.ஆர்.எம். திருச்சபையில் போதகர் ராஜன் சாமுவேல், மாரநா திருச்சபையில் போதகர் ஜார்ஜ் தலைமையில் மற்றும் கூடலூர் சி.எஸ்.ஐ. ஆலயம், புனித தாமஸ், குழந்தை இயேசு, செயின்ட் மேரிஸ் ஆலயங்கள் மற்றும் குன்னூர், கோத்தகிரியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் திருப்பலி நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.