புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில் தவக்காலத்தின் 40 நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து, தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தவக்காலத்தின் கடைசி வாரமான புனித வாரத்தின் தொடக்க ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், வியாழக்கிழமை பெரிய வியாழனாகவும் அனுசரிக்கப்பட்டது.
சிறப்பு பிரார்த்தனை
மேலும் ஏசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாள், புனித வெள்ளியாகவும், துக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி புனித வெள்ளியையொட்டி நேற்று மதியம் கடலூரில் உள்ள தூய எபிபெனி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் மும்மணி தியான ஆராதனை கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் ஆற்காடு லுத்தரன் தேவாலயம், கடலூர் சாமிப்பிள்ளை நகர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவும் கூரும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி
பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் உள்ள புனித விண்ணேற்பு மாதா ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதையொட்டி பங்கு தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் சிலுவை பாதை நடந்தது. அப்போது பங்கு தந்தை மரிய ஆனந்தராஜ், சிலுவையை தோளில் சுமந்தபடி சென்றாா். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
புனித வெள்ளியையொட்டி விருத்தாசலம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்குதந்தை பால் ராஜ்குமார் தலைமையில் காலை முதல் மாலை வரை சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல விருத்தாசலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.