ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வால்பாறை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈஸ்டர் பண்டிகை
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வால்பாறை பகுதியில் சி.எஸ்.ஐ கத்தோலிக்க திருச்சபையின் கிறிஸ்தவர்கள் ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு சிறப்பு வழிபாடுகளோடு கொண்டாடினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 22 -ந்தேதி சாம்பல் புதன் கிழமை முதல் ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் தவக்காலத்தை கடைபிடித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனியை நடத்தினார்கள். புனித வாரத்தின் முதல் நிகழ்வாக கடந்த வியாழக்கிழமை சிறப்பு நிகழ்வாக தனது போதனைகளை எடுத்துக்கூற தெரிந்து கொண்ட 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு ஒருவருக்கு ஒருவர் தாழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஆராதனை நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு ஆராதனை வழிபாடு
இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை ஏசு கிறிஸ்து உயிர் விட்ட புனித வெள்ளிக்கிழமை திருநிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ஆயர் பால்சுந்தர்சிங் தலைமையிலும் துணை ஆயர் ஜான் வெஸ்லி முன்னிலையில் சிறப்பு ஏசு கிறிஸ்து உயிர்த்த ஈஸ்டர் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் வால்பாறை தூய இருதய தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து உயிர்த்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரிக்கப்பட்டு பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக நள்ளிரவு 12 மணிக்கு அல்லேலூயா கீதத்துடன் ஏசு கிறிஸ்து உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து ஆலய பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் பீட்டர், ஆண்டனி ஆகியோர் தலைமையில் ஏசு கிறிஸ்து உயிர்த்த ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி உயிர்த்த ஏசு கிறிஸ்துவை வரவேற்றனர். இதேபோல் அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், முடீஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வால்பாறை வட்டார பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் ஈஸ்டர் நள்ளிரவு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பொள்ளாச்சி ஆலய பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனை வழிபாட்டில் புதிய நெருப்பு மந்திரித்தல், புதிய தீர்த்தம், பாஸ்கா திரி மந்திரித்தல் திருப்பலி கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை விமர்சையாக நடந்தது.