தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கேக் வழங்கி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் போலீஸ் நிலையம் அருகே உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், சேலம் சாலையில் உள்ள அசெம்பிளி ஆப் காட் சபையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

கூட்டு திருப்பலி

இதற்கிடையே கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பங்கு தந்தை செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சியில், டான் பாஸ்கோ பள்ளி தாளாளர் அருட்பணி ஆமோஸ் கலந்து கொண்டார்.

பண்டிகையையொட்டி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டதோடு, கிறிஸ்து அரசர் ஆலயம் பல வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடில் முன்பாக கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தை இயேசுவை வணங்கி சென்றனர்.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாமகிரிப்பேட்டையில் உள்ள காக்காவேரி பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த நூற்றாண்டு கால மாதா கோவிலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டார்கள். நாமகிரிப்பேட்டை காவல் எல்லையில் உள்ள காக்காவேரி கிறிஸ்தவ தேவாலயம் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story