ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சிறப்பு ஆராதனை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ஆயர்கள் பால்சுந்தர்சிங், ஜான் வெஸ்லி தலைமையில் நள்ளிரவு புத்தாண்டு ஆராதனையை நடத்தி அனைவருக்கும் நற்கருணை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்கள். வால்பாறை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களான முடீஸ் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்கு குரு மரிய அந்தோணிசாமி தலைமையிலும், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயத்தில் பங்கு குரு ஆனந்த குமார் தலைமையிலும், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையிலும் ஆலயங்களில் நள்ளிரவு 11.00 மணி முதல் 12 வரை சிறப்பு நன்றி திவ்விய நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெற்றது.

மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

வால்பாறை தூய இருதய தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் இருவரும் புதிய ஆண்டில் இறையாசீருடன் வாழ கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்ற பங்கு மக்களுக்கு நற்கருணை ஆசீர் வழங்கி சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதே போல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தேவாலங்கள் சார்பில் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் புத்தாண்டை கொண்டாட வந்திருந்த சுற்றுலா பயணிகள் நள்ளிரவு புத்தாண்டு திருப்பலியிலும், ஆராதனைகளிலும் கலந்து கொண்டனர். வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போலீசார் விடிய, விடிய ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் பொள்ளாச்சியில் பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், இந்திரா நகரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story